Sunday, April 17, 2011

சிறுகதை....யார் தவறு


அன்பிற்கினிய நண்பர்களே என் இனிய வாசகர்களே இந்த சிறுகதையை படித்துவிட்டு தங்கராஜின் வாழ்க்கையைக் கெடுத்தது யார் என சரியாகப் பதில் அழித்தவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது .படியுங்கள் .பதில் அளியுங்கள் பரிசை தட்டிச் செல்லுங்கள் . பரிசு என்ன என கேட்கிறீர்களா?. அதுதான் சஸ்பென்ஸ் .

சிறுகதை....யார் தவறு
ன்று
தங்கராஜை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த போது தங்கரஜை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க தங்கராஜ்? என்றேன்,
அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை!  அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை.  ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது.  எதற்க்காக அப்படி சொன்னான்?. என்று எனக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“என்ன தங்கராஜ் சொல்ற
“ஆமாம் நீங்க எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலேயே என் வாழ்க்கை, இதோ இந்த சட்டையை போல் ஆகிவிட்டது. இப்போது முகத்தில் செயற்கையான ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அழுந்தச் சொன்னான்.
சட்டையை பார்த்தேன்.  சாயம் போய், சில இடங்களில் கை தையல் போட்டு, அவனுடைய வாழ்க்கை நிலையை காட்டியது.
அவன் எனக்கு யோசிப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. சட்டென்று பேச்சை மாற்றி, “சரி...சரி...அதைப்பற்றி இப்போ எதற்கு. வா டீ சாப்பிடலாம்.  என்று கூறிவிட்டு, அருகிலிருந்த ஒரு டீ கடைக்கு அழைத்துச் சென்றான்.
“இரண்டு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு,
“சரி உன்னைப்பற்றி சொல். இப்போ உன்னைப்பார்த்தால் எதோ ஆபீசர் ஆயிட்டேனு தோணுது. எங்க இருக்க?. எத்தனை பிள்ளைகள்?, மனைவி என்ன செய்கிறார்? கேள்விகளாக அடுக்கினான்.
தான் சொன்ன அந்த வார்த்தைகளால் நான் வேதனைப்படுவேன் அல்லது கோபப்படுவேன் என்று நினைத்து, அதற்க்கு இடம் கொடுக்காமல் அந்த கேள்விகளை என்னிடம் கேட்ட மாதிரி தோன்றியது. 
அவன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவனுடைய பதிலுக்கு அர்த்தம தேடி என் சிந்தனை என்னை அந்த கால்லூரி நாட்களுக்கு தானாகவே இழுத்துச் சென்றது. 

அன்று:
இன்று பல திரைப்பட இயக்குனர்கள்  தங்கள் திரைப்படங்களில் கல்லூரி வாழ்க்கையையும், காதலையும் கலந்து உணர்வுகளுடன் படைக்க  தேர்ந்தெடுத்த
1980 களிலான கல்லூரி காலம்!
அந்த கால கட்டத்தில் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் வகையில், பரந்த பெல்பாட்டம்(பெல்ஸ்), தடிமானான் பெல்ட், நீண்ட அகலமான காலர் மற்றும் பாக்கெட்க்கு பார்டர் வைத்து தைத்த சட்டை இவற்றுடன் ஒரே ஒரு நோட் புக் வைத்துக்கொண்டு திரியும் மாணவர்களில் நானும் ஒருவன். படித்தது இறுதியாண்டு ஆகையால் கூடவே ஒரு சீனியர் என்ற ஒரு தெனாவெட்டும் இருக்கும்.
மாணவிகளை பொருத்தவரை தாவணி, நான்கைந்து நோட்டு புத்தகங்கள் ஒரு டிபன் பாக்ஸ்.
மதுரையில் நான் படித்த கல்லூரி விடுதியின் அருகில் உள்ள மைதானத்தில் வாரத்தில் ஒருநாள் மட்டும் கூட்டம் மொய்க்கும். அன்று விடுதி ஸ்பெஷல் தயாரிப்பான பொங்கல் வழக்கத்துக்கு  மாறாக கொஞ்சம் நன்றாக இருக்கும். அதனாலேயே மாணவர்கள் மைதானத்தில் ஓடுவதும், கால்பந்து விளையாடுவதும், உயரம தாண்டுவதுமாக இருப்பார்கள்.  உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அன்றைய பொங்கலை ஒரு பிடி பிடிப்பதற்காக.
நானும் என் அறை நண்பர்களும் வழக்கம் போலே உடற்பயிற்சி செய்து விட்டு அந்த மைதானத்தின் விடுதியை ஒட்டி இருந்த அந்த மரத்தடி திண்ணையில் உட்கார்ந்து உலக விசயங்களை அலசிக்கொண்டிருந்த அந்த பொன் மாலை பொழுதில்......
தங்கராஜ் எதிரில் வந்து நின்றான்!.
இந்த கதையில் ஆரம்பத்தில் நான் சந்தித்து, என்னை தர்ம சங்கட படுத்திய அதே தங்கராஜ்.
“என்ன தங்கராஜ், எங்க காலேஜ்லயா சேர்ந்திருக்க!, எப்ப சேர்ந்த?
“நேத்துதான் சேர்ந்தேன்....”.
“என்ன மேஜர் எடுத்திருக்க?”
“ஆங்கில... இலக்கியம்னே....”  புதிய மாணவனுக்கான தயக்கம் பேச்சில் தெரிந்தது.
தங்கராஜ் எங்க ஊரை சேர்ந்தவன். என்னை போன்றே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். அதுமட்டுமில்லாமல் தூரத்து உறவை சேர்ந்தவன்.  அம்மா உறவுமுறைகளை விளக்கும் பொழுது எனக்கு ஒன்றும் புரியாது.  இருந்தாலும் புரிந்த மாதிரி தலையாட்டி, நெருக்கமான உறவுகளை மட்டும் உறவுப்பெயர் சொல்லி அழைப்பேன்.
நண்பர்கள் தூரத்து உறவினர்கள் என்று பார்கமாட்டேன். குறைந்த வயது உடையவர்கள் தம்பி தங்கை என்றும், என்னைவிட வயது அதிகம் உள்ளவர்கள், அண்ணன், அக்கா என்றும் கூப்பிட்டு பழக்கமாகிவிட்டது.

எங்கள் ஊரில், பிளஸ் டூ முடித்து ரிசல்ட் எதிர்பார்த்து இருந்த தங்கராஜ், ஒருமுறை நான் கல்லூரி விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது, நீங்க படிக்கிற கல்லூரியில்தான் சேரணும்னு எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கேன் என்றான்.  தாராளமா எங்க கல்லூரியில் சேரு, ரொம்ப நல்ல கல்லூரி என்றிருந்தேன்.
அதன் பிறகு இன்றுதான் பார்கிறேன்.  நம்ம ஊர் பய இங்கு படிப்பது, நமக்கும் ஒரு உதவியா இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த புதிய விடுதியில் தங்கியிருந்தான்.  நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினேன்.  நேரம் கிடைக்கும் பொழுதோ, உதவிதேவைப்பட்டாலோ  என்னை வந்து பார் என்று என் அறை என்னை சொல்லி அனுப்பிவைத்தேன்.
அதன் பிறகு நூலக வாசலில் அடிக்கடி பார்ப்பேன். உள்ளே வரமாட்டான். நண்பர்களுக்காக காத்திருக்கிறேன் என்பான். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம் உள்ளே வந்து படி என்பேன். பதிலேதும் சொல்லாமல் லேசாக சிரித்துவைப்பான்.
நாட்கள் நகர்ந்தன. தங்கராஜ் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அன்று, நூலக வாசலில் வழக்கமாக நிற்கும் மரத்தடியில் நின்றிருந்தான். என்னை கண்டதும், எதிர்பார்த்திருந்ததுபோல் என்னை நோக்கி வேகமாக வந்தான். முகத்தில் வாட்டம் தெரிந்த்தது.
என்ன தங்கராஜ் டல்லா இருக்க, ஏதாவது பிரச்சனையா என்றேன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே.  நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்
பய என்ன கேட்க போரானோ என என் எண்ணங்கள் ஓடின.
அவன் தயங்கியவாறு தொடர்ந்தான்.
“எனக்கு லிட்டரேச்சர் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன். ஒண்ணுமே புரிய மாட்டேங்குதுஎன்றான்.
“சரி இப்ப என்ன பண்ண போற?, இப்பொழுது போய் சொல்றியே? உங்க புரபசர்கிட்ட சொன்னாயா?
“சொன்னேன். வேறு என்ன மேஜர் வேணும்னு எழுதிகொண்டுவா, அந்த புரபசரிடம் பேசி மாற்றி தருகிறேன் என்றார்
“நல்லா யோசித்துதான் முடிவெடுத்தாயா?. நீயேதான் விரும்பி ஆங்கில இலக்கியம் எடுத்த! இப்ப போய் வேண்டாம் என்கிறாயே!. ஆங்கில இலக்கியம் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். போகப்போக எளிதாகவும், ஆர்வமாகவும் இருக்கும்! என்றேன்.
“இல்லண்ணே... வேண்டாம்... கஷ்டமா இருக்குநான் சொல்வதை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை என்பது புரிந்தது.
“சரி உன் விருப்பம். நான் அதற்க்கு என்ன உதவி செய்யமுடியும் என்றேன்.
“நீங்கதான் மேஜர் மாற்றிகேட்டு ஒரு லெட்டர் எழுதித் தர வேண்டும்.
“சரி சாயங்காலம் என் அறைக்கு வா. எழுதித்தருகிறேன்.
என் விடுதி அறையில் இருவர் ஆங்கில இலக்கியம் படிக்கிறார்கள். ஒருவன் காமெர்ஸ். நான் சயின்ஸ். எல்லோரும் மூன்றாமாண்டு மாணவர்கள்.
இதில் ஆங்கில இலக்கியம் படிக்கும் தர்மன் ரொம்ப ரசனையான பேர்வழி. ஷேக்ஸ்பியர் கதைகளை ரசனையுடன் சொல்லுவான். சில பாத்திரங்களுக்கு நடித்துக்காட்டுவான். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நகரத்திற்கு அவனோடு போவது ரொம்ப திரில்லாக இருக்கும். தனியாக கல்லூரி பெண்கள் போனால் போதும், அவர்கள் பின்னால் இயல்பாக சென்று,
“யு ஆர் எ தீப் என நாடக வசனம்போல மென்மையாக சொல்லி நிறுத்தி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பான்.  பெரும்பாலும் திடுக்கிட்டு பார்ப்பார்கள் அவர்கள். உடனே
U Stole my heart. I follow you to get it back” என ரவுசு விடுவான்.
அவர்கள் சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள். சிலர் லேசாக முறைத்தாலும் மேற்கொண்டு ஒன்றும் நடக்காது. இவன் கூடப்போய் என்று அடிவாங்கப்போகிறோமோ! என்ற கவலை எனக்கு எப்போதும் உடனிருக்கும். நல்லவேளையாக ஒருதடவைகூட அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இருந்தாலும் அவன் செயல்கள் சிரிப்பாகவும், அவன் பேசுகிற ஆங்கில இலக்கியங்கள் ரசனையாகவும் இருப்பதால் அவனுடன் வெளியில் செல்வது பிடிக்கும்.
என்னுடைய கெமிஸ்ட்ரி புத்தகங்களைவிட அவனது ஆங்கில இலக்கிய புத்தகங்களையும், அவன் லிப்ரரியிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களையும்  படிப்பதில் அதிக நேரம் செலவழிப்பேன்.
சொன்ன மாதிரியே தங்கராஜ் மாலை 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டான். ஆங்கில இலக்கிய மேஜரிலிருந்து விடுபட அவன் தீர்மானமாக எனக்கு தோன்றியதால், அவன் மனதை மாற்ற நான் மேற்கொண்டு முயற்சிசெய்ய விரும்பவில்லை.
“என்ன மேஜர் மாற்றி கேட்கனும். அதில் சீட் இருக்கா? என்றேன்.  
“ஹிஸ்டரி கேட்டு எழுதித்தாங்க. அங்க ஒரு சீட் காலியாக இருக்கிறது என்று கன்பர்ம் செய்து விட்டேன் என்றான்.
ஒரு வெள்ளை பேப்பர் எடுத்து சரசரவென்று எழுதினேன். முடித்து அவனிடம் கொடுத்தபோழுது அதை படித்துக்கூட பார்க்காமல் அவன்
“தேங்க்ஸ்ணே புரபெசர்கிட்ட கொடுத்து விடுகிறேன். ரொம்ப தேங்க்ஸ்ணே என்று சொல்லி கிளம்பிய அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த நிம்மதியை பார்க்க முடிந்தது!.

இடையில் வந்த தேர்வுகளினால், இந்த சம்பவத்தை நான் கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன். ஒரு இரண்டு வாரங்களுக்கு மேலிருக்கும் லைப்ரரி முன்னால், அதே மரத்தடியில் தங்கராஜ் நின்றுகொண்டிருந்தான்.  என்னை பார்த்ததும் வேகமாக ஓடோடி வந்தான்.  அவன் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை.  கவலை ரேகை படர்ந்திருந்தது.
“என்னாச்சு தங்கராஜ்? மேஜர் மாத்திட்டியா?
“.......இல்லண்ணே!
“ஏன்? நான் எழுதிக்கொடுத்த லெட்டரை உங்க புரபெசர்கிட்ட கொடுத்தியா?
“ம்....கொடுத்தேன்.....
“என்னாச்சு?
“ஒன்னும் ஆகல. லிட்டரேச்சர்லதான் இருக்கேன்.
எங்களுக்கிடையே நடந்த உரையாடல், திருவிளையாடல் தருமி-சிவபெருமான்  உரையாடல் மாதிரி இருந்ததால், எனக்கு வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு,
“என்னாச்சு? விவரமா சொல்லு என்றேன்.
“நீங்க எழுதிக்கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு புரபெசர் அறைக்கு போனேன்.  அவர் தனிய ரொம்ப ப்ரீயா இருந்தார். லெட்டரை வாங்கி வரி விடாம படிச்சார். பிறகு, என் முகத்தை பார்த்து இந்த லெட்டரை யார் எழுதினதுன்னு கேட்டார்.  நான்தான் என்று சொன்னேன். நீதான் எழுதினாயா  என்று மீண்டும் அழுத்தமாக கேட்டார்.  நானும் உங்களிடம் எழுதிவாங்கினேன் என்று சொன்னால் திட்டுவார் என்று நினைத்து, வேறு  யாரும் எழுதிக்கொடுத்து கொண்டு வருகிறேன் என்று நினைத்தீர்களா? எனக்கு என்ன எழுதத்தெரியாதா? நான்தான் சார் எழுதினேன் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
“அப்புறம் என்னாச்சு? நீ சொன்னத நம்பிட்டாரா?
“நம்பிட்டாரு...ஆனா...!
“ஆனா என்னாச்சு?
“அவர் நம்பினாலும், சரி தங்கராஜ். நீ போய் லிட்டரேச்சர்லேயே கண்டினியு பண்ணு என்றார்.  எனக்கு தூக்கி வாரிபோட்டது.   சார், எனக்கு லிட்டரேச்சர் சரியாய் வரல. அதனால்  ஹிஸ்டரி கேட்டு எழுதிருக்கேன் என்றேன்.  உனக்கு லிட்டரேச்சர் வரலேன்னு யார் சொன்னது.  இவ்வளவு அழகா, ஒரு தவறுகூட இல்லாமல் சிம்பிளா தெளிவா  இந்த லெட்டரை எழுதியிருக்கே.  உனக்கு லிட்டரேச்சர்தான் சரி போ. ‘விஷ் யு பெஸ்ட் ஆப் லக் என்றார்.  அப்புறம் தான் எனக்கு புரிந்தது. அந்த லெட்டரை யார் எழுதியது என்று ஏன் திரும்ப திரும்ப கேட்டார் என்று.  அதற்க்கு மேல் உண்மையை மறைக்கக்கூடாது என்று சாரி சார் இந்த லெட்டரை நான்  எழுதல தேர்ட் இயர் படிக்கிற சீனியர்கிட்ட எழுதி வாங்கினேன் என்றேன். நான்தான் இரண்டு மூன்று தரம் கேட்டேன்ல, ஏன் அப்பா சொல்லல. இப்ப ஹிஸ்டரி கிடைக்கல என்பதற்காக போய் சொல்றியா?  லிட்டரேச்சர் படிச்சா வேலை கிடைக்காதுன்னு யாரும் சொன்னார்களா? எவன் சொன்னான்?. கூப்பிடு அவனை நான் பேசிக்கிறேன். நீ நல்லா மட்டும் படி உனக்கு வேலைக்கு நானாச்சு என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அதற்குமேல் என்னை பேச விடவில்லை. நான் வந்து விட்டேன்.
“முதல்லேய நீ உண்மையை சொல்லி இருக்கணும். திரும்ப திரும்ப நீ சொன்ன பொய் அவருக்கு உணமையாகிவிட்டது. அதனால்தான் நீ கடைசியாக சொன்ன உண்மை அவருக்கு பொய்யாகிவிட்டது. சரி இப்ப என்ன முடிவெடுத்திருக்க?என்றேன்.
“இனி என்ன முடிவெடுக்கிறது?!,  இதுதான் எனக்கு கெதி. ஆங்கில இலக்கியத்திலேயே தொடரப்போறேன் என்று.
எனக்கு அதற்க்கு மேல் என்னசொல்வது என்று தெரியாமல்,  “லிட்டரேச்சர் ஒன்னும் கஷ்டமில்ல தங்கராசு போக போக சரியாயிடும்.  நல்ல படிச்சா வெளிநாட்டுக்கெல்லாம் வேலைக்கு போகலாம்!  என்று சமாதானம் கூறினேன்.
அவன் ‘என் கஷ்டம எனக்கில்ல தெரியும் என்பது போல நினைத்திருப்பான் போல,  ஒன்றும் பதில் பேசாமல் அமைதியாக சென்றான்.


நான் டிகிரி முடித்து, மத்திய அரசு துறையில் பணியில் சேர்ந்தேன். வெவேறு ஊர்களில் பணியாற்றினேன். எப்போவாவது ஊருக்கு போனால் தங்கரஜை பற்றி விசாரிப்பேன். படிச்சிகிட்டு இருப்பதை சொல்வாங்க.  
மீண்டும் இன்று:
சில ஆண்டுகள் கடந்திருந்தன!
ஊருக்கு சென்றிருந்த பொழுது, தங்கராஜ் டிகிரியை முடிக்கவில்லை என்றும், சென்னையில் பலசரக்கு கடை வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். பிறகொருமுறை விசாரித்த போது கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகிவிட்டான், ரொம்ப சிரமபடுகிறான் என்றும் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள்.
நான் கால வெள்ளத்தில் தத்தளித்து, காதோரம் நரைத்து, நடுத்தர வயதை தாண்டிய பின், சமீபத்தில் ஒருநாள் ஊருக்கு சென்றிருந்த பொழுதுதான், தெரியாத்தனமா நான் கேட்ட
“எப்படி இருக்க தங்கராஜ்?என்ற என் கேள்விக்கு தங்கராஜ் சொன்ன பதில்தான் நீங்க ஆரம்பத்தில் படித்தது.
டீ வந்ததும் தெரியவில்லை, குடித்ததும் தெரியவில்லை!
“ரொம்ப கஷ்டப்பட்றேன். ஹிஸ்டரி கிடைத்திருந்தாலாவது, எதோ தட்டு தடுமாறி டிகிரி  முடிச்சி ஏதாவது ஒரு வேலைக்கு போயிருப்பேன்.  ஆங்கில இலக்கியம் சுத்தமா வரல. நீங்க சொன்ன மாதிரி வெளிநாட்டுக்கெல்லாம் போகமுடியலனாலும் சென்னைக்கு போனேன் அங்க தாக்கு புடிச்சி தொழில் செய்ய முடியல அதனால அப்போவோட கடைய பார்த்துக்க இங்கேயே வந்துட்டேன். உங்க ஒரு கடிதத்தால என் வாழ்கையே ஒப்பேறிப் போச்சு என்றான். வார்த்தைகளில் ஒரு ஏமாற்றம் நக்கல் தெரிந்தது.
அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது,
மதுரை பேருந்து வந்தததால் அவனிடம் இருந்து விடை பெற்று பேருந்து ஏறினேன்.  இன்றுவரை அவனுடைய அந்த வார்த்தைகள் என் சிந்தனைக்கு வந்து அவ்வப்பொழுது என் மனதை அந்த கேள்வி உருத்திக்கொண்டிருக்கும்.
“தங்கராசு வாழ்கையை பாழாக்கியது நானா? அல்லது அவனா?

Friday, August 20, 2010

ஏன் இந்த தலைப்பு

"கண்ணில் கனல் சிந்தி கட்டவிழ்க்க வந்தவளே !"

"கண்ணில் கனல் சிந்தி கட்டவிழ்க்க வந்தவளே !" என்ற பாரதிதாசனின் வரிகள் எனக்கு நிரம்பப் பிடிக்கும் . பெண் குழந்தைக்கு தாலாட்டு என்ற பாடலில் வருபவை . சமூகத்தில் நடைபெறும் அநீதிகளைக் கண்டு பொங்கி எழ வேண்டும் ,
குறிப்பாக பெண்கள் தங்களை சுற்றி ஆண் வர்க்க சமூகத்தால் இறுக்கிப் பின்னப்பட்ட கட்டுகளை உடைத்தெறிய குழந்தையாக இருக்கும் போதே சொல்லித் தரவேண்டும் என்பதே பாரதிதாசனின் பேரவா . இது பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல சமூகத்தில் நிலவும் பிற்போக்குத்தனமான கட்டுகளை தகர்த்தெறிய கண்ணில் கனல் சிந்தி சுட்டெரிக்கவேண்டும் என எல்லோருக்கும் சொல்கிற வரிகள் இவை . இனி என் பதிவுகள் தொடரும் .